இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான பக்தர்கள் கேரளாவிலுள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். இந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், சபரிமலை பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கேரள அரசு வகுத்துள்ளது.
கீழ்க்கண்ட அந்த நெறிமுறைகளை தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:-
அனைத்து பக்தர்களும் காவல் துறையின் மெய்நிகர் வரிசை (Virtual Queue)-க்கான வலைவிவரப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் (https://sabarimalaonline.org/).
தொடக்கத்தில் வார நாள்களில் நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாள்களில் நாளொன்றுக்கு இரண்டாயிரம் பக்தர்களும் மட்டுமே, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசன நேரத்திற்கு முன்னதாக 24 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கரோனா தொற்றின்மைச் சான்று பதிவு செய்வதற்கு கட்டாயமாகும். மற்றவர்களுக்கு உதவிட, நுழைவு வாயில்களில் கட்டண அடிப்படையில் ஆன்டிஜென் சோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
கடந்த காலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள், 10 வயதிற்கு கீழுள்ளோரும் மற்றும் 60 வயதிற்கு மேலுள்ளோரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இருதயம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிற இணை நோயுள்ளவர்கள் எந்த வயதினரானாலும் சபரிமலை பயணத்திற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள்.