சென்னை:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் இன்று (அக்.06) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மூன்று வேளாண் சட்டங்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சீர்திருத்தம். தற்போது விளைப்பொருள்களின் விலை மற்றும் யாரிடம் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகளால் தீர்மானிக்க முடியும்.
அரசின் ஒழுங்குமுறை சந்தைகளில் (APMC) பொருள்களை விற்பனை செய்தால் 8.5 சதவிகித வரி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இடைத்தரகர்கள் பணம் வழங்க வேண்டும். வெளியே விற்பனை செய்தால் விவசாயிகள் வரி செலுத்த தேவையில்லை, இதனால் அவர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் விலைவாசி உயராது, பொதுமக்களுக்கும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது.
25 ஆண்டுகளாக வேளாண் நிபுணர்கள் கூறி வந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் நடைமுறை தொடரும். முந்தைய ஆட்சிகளில் அது நெல் மற்றும் கோதுமையை சார்தே வழங்கப்பட்டு வந்தது, மற்ற 20 பயிர்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை. ராகி, கடலை, பருப்பு வகைகள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படவில்லை. இந்த நிலையை மாற்றியது பாஜக.