கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டுத் திட்ட சட்டம் (இஎஸ்ஐ) பொருந்தும் எனக்கூறி, தமிழ்நாடு அரசு 2010ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஏற்கனவே இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற ஒன்பது நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தற்போது தமிழ்நாடு அரசின் உத்தரவை அமல்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். ஆனால், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, தமிழ்நாடு அரசு உத்தரவு அமல்படுத்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், இஎஸ்ஐ சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பன உள்ளிட்ட சட்ட கேள்விகளுக்கு பதில் காணும் வகையில், இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார்.
இதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா? இல்லையா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற ஒன்பது நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தமிழ்நாடு அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா? இல்லையா? என்பது மட்டுமல்லாமல் பல சட்ட கேள்விகள் இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் இஎஸ்ஐ அறிவிப்பாணை பொருந்தும் என உத்தரவிட்டு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ESI திட்டம்: மகப்பேறு உதவித்தொகையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு!