தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி ஐபிஎஸ் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றதால், அந்த இடத்தில் யாரை நியமிப்பது என்று தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வந்தது. உளவுத்துறை ஐஜி பதவி, ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவதால், அதில் அனுபவம் மிக்க அதிகாரிகள்தான் நியமிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் உளவுத்துறை புதிய ஐஜியாக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் பிரபாகர் பிறப்பித்தார். அந்த உத்தரவில், ‘‘சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, தமிழக உளவுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவின் கூடுதல் டிஜிபி பதவியும் காலியாக இருப்பதால் அந்த பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார். மேலும் சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் பதவியும் கூடுதல் பொறுப்பாக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவரான ஈஸ்வரமூர்த்தி, உளவுத்துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவர். எம்ஏ முதுகலைப்பட்டம் பெற்றவரான இவர், 1998ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியாவார். இவர் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தமிழக காவல் பணியில் சேர்ந்தவர்.