தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தேர்தல் விதிமீறல் குறித்து ஆதாரத்துடன் புகாரளித்தால் உடனே நடவடிக்கை" - சத்யபிரதா சாகு! - தேர்தல் பார்வையாளர்கள்

ஆதாரத்துடன் எந்தப் புகார்கள் அளித்தாலும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

che
che

By

Published : Feb 15, 2023, 6:38 PM IST

Updated : Feb 15, 2023, 6:50 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைமைத் தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் இன்று(பிப்.15) காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெற்றது. இதில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹ.கிருஷ்ணன் உன்னி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதில், "இடைத்தேர்தலை சுமூகமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான ஆலோசனைகளை இந்திய தேர்தல் ஆணையம் அளித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதற்காக, ஆயிரத்து 430க்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்களில் நாளை இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளன.

பாதுகாப்புப் பணியைப் பொறுத்தவரையில், 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், 2 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், 2 கம்பெனி ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஒரு கம்பெனி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தவிர, ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்புப் பணியை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு ஆயுதப் படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக எந்தப் புகார்கள் அளிக்கப்பட்டாலும், அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஆதாரத்துடன் எந்தப் புகார்கள் அளித்தாலும், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த கட்ட நகர்வு என்ன? ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனை!

Last Updated : Feb 15, 2023, 6:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details