சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆரம்பத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்கியது. குறிப்பாக, பாஜக இறுதி வரை ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என்றே கூறியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டதால் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே பாஜக சார்பில் ஜி.கே. வாசனிடம் பேசி தாமகவை தாமரை சின்னத்தில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை அனுப்பி ஜி.கே. வாசனிடம் பேசி அவரையே அதிமுக போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட வைத்தார்.
அப்போதிலிருந்தே ஈபிஎஸ் தரப்பில் இடைத் தேர்தலுக்கான பணிகள் வேகமெடுத்தது. அதன்படியே இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஈபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஓபிஎஸ் தரப்பினர் ஒருபுறம் நான் தான் உண்மையான அதிமுக என்றும், அதிமுகவின் வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுவார் என்றும் அறிவித்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் தேசிய கட்சியான பாஜக போட்டியிட்டால், நாங்கள் பாஜகவிற்கு ஆதரவு தருவோம் என்று ஒபிஎஸ் தெரிவித்தார். இதனால் கூட்டணி கட்சியான பாஜக இரட்டை இலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் நல்லது, கிடைக்கவில்லை என்றால் நல்லது என்று பாணியில் தேர்தல் பணிகளை செய்து வந்தனர். ஈபிஎஸ் தரப்பினர் வேட்பாளர் அறிவிப்பு பேனர்கள் ஒட்டினர். அந்த பேனர்களில் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதையும் தாண்டி தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பேனர்களில் குறிப்பிட்டு, பாஜகவை கழட்டிவிட திட்டமிட்டது போல் காட்டினர்.
அதிமுகவில் இருந்து பாஜக விலகுகிறதா? என்று பாஜகவினரிடையே கேட்கும் போது, "பேனர்களில் எழுத்து பிழை ஏற்பட்டிருக்கும்" என்று விளக்கம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அன்றே பேனர்கள் மாற்றப்பட்டன. மாற்றப்பட்ட பேனர்களில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பேர்களில் மாறி மாறி கூட்டணியின் பெயரை மாற்றியது ஈபிஎஸ் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது, இன்னும் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவினர் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை எடுத்துவிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணி என்று மாற்றம் செய்யுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அதன்பின் பொதுக்குழுவின் மூலம் வேட்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினால் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கூட பாஜகவ தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்கவில்லை. இரட்டை இலை சின்னம் உள்ளவர்களுக்கு ஆதரவு என்று மட்டுமே பாஜக கூறியது.