சென்னையில் நடைபெற்ற முதலாவது ஜி-20 கல்வி பணிக்குழுவின் கூட்டத்தில் 30 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி:உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பற்றிய சிறந்த நடைமுறைகள் மிகப்பெருமளவில் விவாதிக்கப்பட்டது.
இந்த 2 நாள் கூட்டத்தில் யுனிசெஃப் மற்றும் இதர சர்வதேச அமைப்புகளும் பங்கேற்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறுப்புநாடுகள் சந்திக்கும் கல்விச் சவால்களும் எதிர்கொண்டு நிலையான நீண்ட தீர்வுகளைக் கண்டறிய, எதிர்கால பணிச்சூழலில் வாழ்நாள் முழுவதும் கற்றல் திறனை மேம்படுத்தவது உள்ளிட்ட முக்கிய இலக்குகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள பிரதிநிதிகள் ஆர்வம் காட்டினர்.
அனைவரையும் உள்ளடக்கிய சமமான, பொருத்தமான, தரமானக் கல்வி மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விரிவான முறையில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் ,3 கல்வி பணிக்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள கடைசி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும்.
சென்னை ஐஐடி பணிக்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது என தெரிவித்தார். இந்த 2 நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார் கூறும்போது, பள்ளி அளவில் எழுத்தறிவை வலுப்படுத்தும் வழிமுறைகள், மேலும் கல்வியை வலுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்கள் குறித்து விரிவான விவாதம் பிரதிநிதிகளால் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.