இதுதொடர்பாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.8) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல் வழியே ஆட்சியைப் பிடித்த இந்த விடியா திமுக அரசின் மக்கள் விரோதப்போக்கு தொடர்கதையாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வர முன்களப் பணியாளர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் தீட்டும் வகையிலும், படித்த ஏராளமான இளைஞர்களின், அரசு வேலை என்ற கனவில் மண்ணை வாரிப்போடும் வேலையில் தற்போது இந்த விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
படித்த இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பு கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115-ஐ திரும்பப் பெறுக. ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக்கொண்டு வருவேன் என்று தேனொழுக தேர்தல் நேரத்தில் பேசி, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கைகழுவி விட்டார். மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியபோதெல்லாம், அம்மாவின் அரசு உடனுக்குடன் முன் தேதியிட்டு வழங்கிய அகவிலைப்படி உயர்வை இந்த விடியா திமுக அரசு நிறுத்தியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக அரசுப்பணிக்கு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டுவந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சமூக நீதி உறுதி செய்யப்படுவதோடு, நேர்மையான முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த விடியா அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகத்தெரிகிறது. இப்படி தனியார் நிறுவனங்கள், ஆட்களை பணியமர்த்துவதன் மூலம் சதவீத இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தைக் குழிதோண்டி புதைக்கும் வேலையில் இந்த விடியா அரசு இறங்கியுள்ளது என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.