சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய ஈபிஎஸ்ஸை போட்டியின்றி தேர்வு செய்ய அவரது அணியினர் திட்டமிட்டு உள்ளனர். வரும் மார்ச் 27ஆம் தேதி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி அதை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உள்ளனர். இந்த நிலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், "பொதுச்செயலாளர் தேர்தலை சட்ட ரீதியாக சந்திப்போம். எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்திப்பது சிறுபிள்ளை தனமானது. திடீர் சாம்பார், திடீர் ரசம் போல் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியின் சட்ட விதிகளை மாற்றி பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்து மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு இடைத் தேர்தலில் மக்கள் அளித்த பாடத்தை கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காப்பாற்றிய இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு இயக்கத்தை சீர்குலைத்துள்ளார். இனியும் இவர்கள் திருந்துவார்கள் என்றோ அல்லது இணைவார்கள் என்றோ நாங்கள் நினைக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணியுங்கள். எடப்பாடி பழனிசாமியிடம் அதிகமான தொண்டர்கள் இல்லை. அதிகமான குண்டர்கள் தான் இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.