சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின் எடப்பாடி பழனிசாமி, பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அதைத் தொடர்ந்து, மேடையில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி, "அடித்தட்டு மக்களுக்கு அனைத்து திட்டங்களும் போய்ச் சேர பாடுபட்டவர் அண்ணா. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், ஏழை எப்போது சிரிக்கிறானோ அப்போது தான் நாடு நலம் பெறும் என்றார். தற்போது அண்ணாவுடைய பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம்.
இன்றைக்கு ஆட்சியாளர்கள் திமுக 2½ ஆண்டு காலத்தில் என்ன செய்தார்கள்?. நம் ஆட்சியில் எந்த நன்மையும் நடக்கவில்லை என்கிறார்கள். 2011 முதல் 2021, 10 ஆண்டு காலம் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்டம் பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை அதிமுக உருவாக்கியது. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். ஆயிரக்கணக்கான திட்டம், மக்களுக்குப் போய் சேர்ந்தது.
மேலும் அதிமுக ஆட்சியில் தான், 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. 7.5% இட ஒதுக்கீடு பெற்று அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்கியது அதிமுக ஆட்சி. ஏழைகள் இல்லாத சமூகம் உருவாக்க வேண்டும் அதுவே லட்சியம், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ கிளினிக் திறந்தது அதிமுக, அதற்கு மூடு விழா செய்தது திமுக.
இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி. ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் உங்களுக்கு என்ன வயிற்று எரிச்சல். தமிழகத்தில் 7 சட்டக் கல்லூரி, 4 பொறியியல், 4 கால்நடை ஆராய்ச்சி கல்லூரி கொண்டு வந்துள்ளோம். 100க்கு 32 பேர் தான் உயர் கல்வி படித்து வந்தார்கள். ஆனால் தற்போது அம்மாவின் சாதனைகளால் 100க்கு 52% பேர் படித்து வருகிறார்கள் என தமிழ்நாடு சாதனை புரிந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 75 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அதிக நீளமான தார்ச் சாலைகளை அமைத்த மாநிலம் தமிழ்நாடு, மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தது அதிமுக அரசு. சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்களுக்குக் கொடுப்பதை நிறுத்தி விட்டீர்கள். தாலிக்குத் தங்கம் திட்டம், பெண்கள் திருமண வயதை அடையும் போது கொடுத்து ஒளியேற்றியது அதிமுக.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, ஏழை மாணவர்கள் மற்றும் அடித்தட்டில் வாழும் மாணவர்கள் மடியில் மடிக்கணினி தவழ விட்ட அரசு அதிமுக. இதில் ஒரு திட்டத்தையாவது நீங்கள் கொடுத்தீர்களா?. மருத்துவ காப்பீடு திட்டம் 2 லட்சம், அதை 5 லட்சமாக உயர்த்தியது அதிமுக. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அனைத்து மாவட்டத்திலும் பிரச்சனைகளை கேட்டு அதனை நிகழ்த்திக் காட்டினோம்.
அம்மா முழு உருவப் படத்தை சட்டமன்றத்தில் திறந்தோம். நம்மை உருவாக்கிய தலைவர்களுக்கு மரியாதை செய்தோம். மத்திய உள்துறை அமைச்சர் கலைவானர் அரங்கம் அழைத்து வந்து 63 ஆயிரம் கோடிக்குத் திட்டம் துவக்கி வைத்தோம். மெட்ரோ ரயில் 118 கி.மீ அடிக்கல் நாட்டினோம். இவ்வளவு செய்துள்ளோம் ஒன்றுமே செய்யவில்லை என்கிறார்கள். பொம்மை முதலமைச்சர் 2½ வருடத்தில் என்ன செய்திருக்கிறீர்கள். தேர்தல் அறிக்கை 520 கொடுத்தீர்கள், 100% முடித்ததாக சொல்லியுள்ளார், எங்கப்பா முடிச்சீங்க!.
தமிழ்நாட்டில் போதை அதிகரித்துவிட்டது, எங்கு ஒழித்தீர்கள். தினந்தோறும் கொலை, விடியா திமுக ஆட்சியில் கள்ளச் சாராயம் பெருகி விட்டது. பொம்மை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. போலீசுக்கே பாதுகாப்பு இல்லை, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் உள்ளது என நாட்டு மக்கள் உணர வேண்டும். திமுக ஏவல் துறையாக காவல்துறை உள்ளது. அதிமுக ஐடி பிரிவில் குறைகளைச் சுட்டிக்காட்டினால் பொய் வழக்குப் போடுவது, அதிமுக ஆட்சியில் நாட்டிலேயே அதிக போராட்டம் நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு.
அனுமதி கொடுத்து முழு பாதுகாப்பு கொடுத்தோம். நீங்கள் அப்படியா செய்கிறீர்கள்? அதிமுக கூட்டம் என்றால் நடுங்குகிறார் ஸ்டாலின். எந்த வழக்குப் போட்டாலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும், தில்லு திராணி தெம்பு அதிமுகவிற்கு உள்ளது. ஆர்.எஸ்.பாரதி ஒரு வழக்குப் போட்டார் அந்த வழக்கு நீதிமன்றத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்லிட்டாங்க, வழக்குப் போட்டவர் மேல் முறையீடு செய்யவில்லை, லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்கிறது. காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.
இந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது. இந்த ஆட்சி வந்த பிறகு, உழைக்கும் திறனற்ற முதியவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை கேட்டு கோரிக்கை வைத்தார்கள். 110 விதியின் கீழ் தகுதியான முதியோருக்கு முதியோர் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு கொடுத்தோம். அதை திமுக நிறுத்தி விட்டது, இது தான் திராவிட மாடல் ஆட்சி.
கரோனாவால் நாடே ஆடிப் போயிருந்தது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது தமிழ்நாடு, அந்த காலகட்டத்தில் வருமானம் இல்லை, ஆனால் அதிமுக எல்லா குடும்ப அட்டைக்கும் 1000 ரூபாய் வழங்கியது. விலையில்லா அரிசி, சர்க்கரை வழங்கி 11 மாத காலம் நிறைவேற்றிக் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் தான் அதிக பாலம் கட்டிக் கொடுத்தோம், பல்லாவரம் பாலம்கூட நாம் தான் கட்டிக் கொடுத்தோம்.