திண்டுக்கல்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பழனிக்கு வருகை தந்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காண்கிறார். அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம்.
அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிற்கு குடும்பம் கிடையாது. அவர்களுக்கு மக்கள்தான் குடும்பம் என வாழ்ந்து மறைந்தனர். ஆனால் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் சாதாரண தொண்டன்கூட முதலமைச்சராக வர முடியும். சந்தர்ப்ப சூழ்நிலையால் நீங்கள் (முதலமைச்சர் ஸ்டாலின்) இன்று தமிழ்நாடு முதலமைச்சராக உள்ளீர்கள்.
இனி இலங்கை நிலைதான்: மக்களின் குறைகளை தீர்க்கவே ஸ்டாலினை முதலமைச்சராக அமர வைத்துள்ளார்களே ஒழிய, மக்களை பலி வாங்க அல்ல. நீங்கள் (முதலமைச்சர் ஸ்டாலின்) மக்களை மறந்தால் மக்கள் உங்களை மறப்பார்கள் என்பதை நினைவில் கொண்டு ஆட்சி செய்யுங்கள். குடும்ப ஆட்சி நடைபெற்ற இலங்கையின் இன்றைய நிலையை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும்.
தனது குடும்பத்தின் அதிகார மையங்களை கட்டுப்படுத்த முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், இதே நிலை நீடித்தால் இலங்கையை போல தமிழ்நாட்டில் உங்கள் குடும்பத்திற்கும் அதே நிலைதான் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் கவலைப்படாமல் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்தி கொண்டு வருகிறார்.
ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகியும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இதுவரை என்ன செய்தார் ஸ்டாலின்? அனைத்து துறைகளிலும் லஞ்சம். திமுக அமைச்சர்களுக்கு காலை முதல் மாலை வரை லஞ்சம் வாங்கி, கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.
உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக இந்த ஆட்சியை ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியில் அதிமுக இருந்தாலும் இல்லையென்றாலும், மக்கள் பிரச்னைகளை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக. மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் வெள்ளத்தில் சிக்கியபோதும், யாருமே சென்று பார்க்கவில்லை.
சேதப்படுத்திய ஓபிஎஸ்: அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலின் திட்டமிட்டார். அவருடன் இணைந்து அதிமுகவின் இருபெரும் தலைவர்களுக்கும், அதிமுகவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ். அதிமுகவினர் கோயிலாக எண்ணும் அதிமுக தலைமை அலுவலகத்தையும், ஜெயலலிதா இருந்த அறையையும் காலால் உதைத்து ஈவு இரக்கமின்றி அங்குள்ள பொருட்களை சேதப்படுதியவர், ஓபிஎஸ்.