சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று சுற்றுபயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயில் வடை சுடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளிநாடு சென்று எந்த முதலீட்டை ஈர்த்து வந்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், புதிய திட்டங்களையும் தொடங்காமல், "கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்' செய்வதிலேயே முதலமைச்சரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும்; விடியா அரசின் அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன், 'குறுகிய காலத்தில், முதலமைச்சரின் மகனும், மருமகனும் அடித்த 30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிப்பதாக' ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது, இந்த ஆட்சியின் ஊழலை பறை சாற்றுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அதனைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட "யாதும் ஊரே" உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதனால் தமிழகத்திற்கு கிடைக்கப்பெற்ற பயன்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார்.