சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களிடையே வன்முறை வெடித்தது.
இந்தச்சம்பவத்தின்போது தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி உள்பட பல்வேறு ஆவணங்களை எடுத்துச்சென்றதாக அதிமுக-வினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இரு தரப்பினரால் அளிக்கப்பட்ட நான்கு தனித்தனிப் புகார்கள் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக விசாரணை அலுவலராக சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் 4 ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இவ்வழக்குத்தொடர்பாக ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் இருமுறை நேரடியாக விசாரணை நடத்தியுள்ளனர்.
அதேபோல அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடமும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகத்திடமும் சிபிசிஐடி காவல் துறையினர் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்குத்தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 69 பேரை தினமும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும்; முன்ஜாமீன் பெற்ற அனைவரும் 20 ஆயிரம் ரூபாய் அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் முன்ஜாமீன் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 10-12 மணி வரை கையெழுத்திடுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன் ஜாமீன் பெற்ற அவரது ஆதரவாளர்களுக்கு இன்று மதியம் 2-4 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்டச்செயலாளர்கள் ஆதிராஜாராம், விருகை ரவி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா, அசோக் குமார் உள்ளிட்ட 38 பேர் கையெழுத்திட்டனர். இதன்தொடர்ச்சியாக முன்ஜாமீன் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 25 பேர் கையெழுத்திட்டுச்சென்றனர். அடுத்த 15 நாள்களுக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மாவட்டச்செயலாளர் அசோக், கட்சி அலுவலகத்திற்கு வழக்கம்போல ஓ.பன்னீர்செல்வம் சென்றதாகவும், அப்போது குண்டர்களை ஏவி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி தலைமை அலுவலகத்தில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆனால், தங்கள் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கிலிருந்து விரைவில் விடுதலை பெறுவோம் எனவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்தவில்லை; காசு கொடுத்து கார்ப்பரேட் கம்பெனி நடத்துவதாகவும், தங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:உங்கள் துறையில் முதலமைச்சர்...காவல்துறையினரிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர்...