சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
சந்திபிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, "கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பன்னீர்செல்வத்தை சந்தித்தேன்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. அரசியலில் ஒரு சர்வாதிகாரி போல் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். சசிகலா பழனிசாமிக்கு ஆட்சியைக் கொடுத்தார், ஆனால் அவர் விசுவாசமாக இருக்கவில்லை. மனதிற்குள் காழ்ப்புணர்சியை வைத்துக்கொண்டு எங்களை போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியவர் தான் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர் தான், பழனிசாமி. துணிச்சல் இருந்தால் கிராமங்களில் சென்று ஒரு பெட்டியை வைத்து வென்று பாருங்கள். இரட்டை இலைச்சின்னம் இல்லாமல் பழனிசாமி வெளியே போய் நின்றால் 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது. எதிர்க்கட்சிப் பதவியை வாங்கி எடப்பாடி பழனிசாமி ஒரு வருடம் ஆகிறது.