தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் இடையீட்டு மனு! - chennai high court

EPS Interlocutory Petition: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சேகரிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க உத்தரவிடக்கோரி, எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு மீதான விசாரணை
எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு மீதான விசாரணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 7:58 PM IST

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தனது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது அந்த வழக்கில், தன்னிடம் உள்ள ஆதாரங்களைச் சேகரிக்க, வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை முயற்சி, காவலாளி கொலை, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணம் ஆகியவை குறித்து தனியார் ஆன்லைன் செய்தி நிறுவனம், ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

இதையடுத்து அந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் உட்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் 153 (ஏ) (மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இருபிரிவினரிடைய பகை, மோதலை ஏற்படுத்துதல்), 505(1), (2) (ஆவணங்களை வெளியிட்டு, அரசுக்கு எதிராக பொதுமக்களை கலவரத்தில் ஈடுபடச் செய்தல்), 120 (பி) (கூட்டுச்சதி) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், “கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எனக்குத் தொடர்பு இருப்பதாகச் செய்தி வெளியிட்டது, எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.

அவதூறாகச் செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனம் இழப்பீடான 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என, 2019ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கில், பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் நீதிமன்றம் வரமுடியாததால், வழக்கு தொடர்பாக தன்னிடம் உள்ள ஆவணங்களைச் சேகரித்து நீதிமன்றத்துக்கு உதவ, வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என இடையீட்டு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (நவ.02) விசாரணைக்கு வந்தபோது, மாத்யூ சாமுவேல் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை நாளை (நவ.03) விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:"மதிப்பெண் பட்டியல் முறைக்கேட்டிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை" - அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தர் சூரப்பா!

ABOUT THE AUTHOR

...view details