சென்னை: மதனந்தபுரம், ஆலந்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே மிக கனமழை பெய்து வருகிறது. அதனால் சென்னை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் குளம் போல் தேங்கி இன்னும் வடியாமல் இருக்கின்றது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். அதோடு இன்று (நவ. 14) காலையில் இருந்து இப்போது வரை நான் பல இடங்களுக்கு சென்று பார்த்தேன்.
விடியா திமுக அரசு சென்னை மாநகர பகுதியில் ஒரு சொட்டு நீர்கூட தேங்கவில்லை என கூறிவருகிறது. என்னோடு வந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். அதில் எந்த அளவிற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது என்பது பதிவாகியுள்ளது. வெள்ளநீர் தேங்கவில்லை என முதலமைச்சர், அமைச்சர்கள் பொய்யான செய்தியை தெரிவித்து வருகிறார்கள். சென்னை மாநகர பகுதியில் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது என பொய்யான தகவலை அவர்கள் கூறுகின்றனர்.