தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

EPS Kodanad murder and robbery case: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

eps-exempted-from-appearing-defamation-appeal-case-mhc-ordered-to-file-report-to-eps
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 6:29 PM IST

சென்னை :கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக தற்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ரூபாய் 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கோரி 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு (டிசம்பர்.01) இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேத்யூ சாமுவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரியதாகவும், ஆனால், உயர் நீதிமன்ற கட்டடம் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் உள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளைக் காரணமாகக் கூற முடியாது எனவும், மேலும் உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தான் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், சாட்சியம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இன்னும் தொடங்கவில்லை என விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு குறித்து டிசம்பர் 8ஆம் தேதிக்குள் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பெங்களூரில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details