சென்னை:தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து மார்ச் 21ஆம் தேதி முதல் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய பின், அவர் தலைமையிலான அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதலமைச்சரின் இயலாமை காரணமாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை முறையாக காப்பாற்ற முடியவில்லை. தாலிக்குத் தங்கம் திட்டம், திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட அதிமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு மாறாக புதிய திட்டங்களை இந்த அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புற ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் கிராமப் பொருளாதாரம் மேம்படவில்லை. அம்மா மினி கிளினிக் திட்டம், அம்மா ஸ்கூட்டர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைக் கைவிட்டுள்ளனர்.