தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் பொருள்கள் இலவசம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

By

Published : Jul 3, 2020, 2:57 PM IST

Updated : Jul 3, 2020, 3:43 PM IST

14:49 July 03

ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 24.3.2020 முதல் மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, அவ்வப்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் 3,280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவித் தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.

இது தவிர, ஊரடங்கு தொடர்ந்த காரணத்தினால், மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசியும், சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்றே விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க மத்திய அரசால் உத்தரவிடப்பட்டது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பொறுத்து, கூடுதலான அரிசியும், இந்த 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களாக தொடர்ந்து வழங்கி, அதனை ஜூலை மாதமும் வழங்கி மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். 

நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 6.7.2020 முதல் 9.7.2020வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் (Token) வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். 

சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்கு 10.7.2020 முதல் சென்று அத்தியாவசிய பொருள்களை பெற்றுக்கொள்ளலாம். தடைசெய்யபட்ட பகுதிகளில் (Containment Zones) உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jul 3, 2020, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details