சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, 2019ஆம் ஆண்டு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, பாஜக 4 இடங்களை வென்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேசிய கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட விரும்புகிறது.
ஆளுநராக ஓபிஎஸ்: அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்னை காரணமாக பாஜகவின் கூட்டணி கணக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதிமுகவை ஒன்றிணைக்க பல முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. பாஜக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஓபிஎஸ் சம்மதம் தெரிவிக்க, இபிஎஸ் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இதனால் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தி, அவரது அணிக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் ஓபிஎஸூக்கு ஆளுநர் பதவியும், அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு, ஏற்கனவே உள்ள தேனி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்ய உள்ளது.
அதில் வெற்றியடைய முடியாத பட்சத்தில், மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதன் மூலம் மத்திய அமைச்சர் பதவி என ஓபிஎஸ் தரப்பிடம் பாஜக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் சமீபத்தில் குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஓபிஎஸ் தரப்பிடம் பேசியுள்ளனர்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் வழக்கை ஜனவரி 4ஆம் தேதி தள்ளிவைக்க ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் இரு தரப்பினரிடையே சமரசம் செய்வதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதற்கு ஓபிஎஸ் தரப்பில் ஆலோசித்துவிட்டு தகவல் கொடுக்கிறேன் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஒருவேளை பாஜகவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை பாஜகவின் முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், அடுத்த வியூகம் எதுவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
நான்கு அணிகளின் தேவை: ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் நான்கு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகிய இருவரின் இணைப்பு தேர்தல் நேரத்தில்தான் தேவைப்படும். அதிமுக விவகாரம் ஒருபுறம் இருக்க, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவும் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாஜகவின் வியூகம் குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், "அதிமுகவை பலவீனப்படுத்திவிட்டு, அந்த இடத்தை பாஜக அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்து, இபிஎஸ் அணியினை எதிர்க்க வைக்கின்றனர். பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 5 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு வாக்குச்சாவடி வரை அதிமுகவின் உதவி பாஜகவுக்கு தேவைப்படுகிறது.
இருப்பினும், பாஜகவில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், தனித்து போட்டியிடும் முடிவுக்கு அந்த தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். திமுகவின் எதிர்ப்பு வாக்குகளான ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் வாக்குகள் சிதறிவிடக்கூடாது என பாஜக நினைக்கிறது.
அதனால்தான் அனைவரையும் ஒன்றிணையுங்கள் என்று பாஜக கூறி வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 16 இடங்களை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்றும், அதில் நாங்கள் உள்ஒதுக்கீடு முறையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு பிரித்து கொடுத்து விடுகிறோம் என பாஜக, இபிஎஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதற்கும் இபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி, வழக்குகள் மூலம் இபிஎஸ் அணியினரை மிரட்டும் வேலைகளில் பாஜக எப்போது ஈடுபடும் என்று தெரியவில்லை" என கூறினார். ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என கூறப்படுகிறது. இரட்டை இலையை முடக்கிவிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்ற இதர கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கும் வியூகத்தையும் பாஜக எடுக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:ஓபிஎஸ் தலைமையில் மா.செ. கூட்டம்.. பொதுக்குழு தேதி அறிவிக்க வாய்ப்பு.?