சென்னை:அதிமுகவின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலைமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் வாசிக்க அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். அப்போது எம்ஜிஆரை நெஞ்சிலே தாங்கி அவர் விட்டு சென்ற பணிகளை லட்சிய பாதையை தடுமாறாது பயணிப்போம்.
குடும்ப அரசியலின் மொத்த வடிவம் திமுக, அந்த திமுகவை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தி காட்டுவோம். மக்கள் சக்தியாம் எம்ஜிஆரின் துணை கொண்டு அவர் வகுத்து தந்த பாதையில் வீறு நடை போடுவோம். ஜெயலலிதாவின் வழியில் 40 தொகுதிகளையும் வெற்றி கொள்வோம்.
நீட் தேர்வு விலக்கு எங்கே, கல்விக்கடன் ரத்து எங்கே, டீசல் விலை குறைப்பு எங்கே, கேஸ் சிலிண்டர் மானியம் எங்கே, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் எங்கே, பொங்கல் தொகுப்புடன் 5,000 எங்கே, செங்கரும்பு எங்கே, மக்கள் கேள்விகளுக்கு பதில் எங்கே எனவும் விரைவில் விடியா திமுக அரசை வீட்டு அனுப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் 2022: ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து