சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூலை 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் பாமர மக்கள் முறையான சிகிச்சை இல்லாமல், மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் தங்கள் உயிரைக் காக்க போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 3 முதல் 6 மாதங்களுக்குத் தேவைப்படும் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மொத்தமாக வாங்கி, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தாமதமின்றி நேரடியாக வழங்கும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இப்போது இருக்கிறதா என்பதே தெரியவில்லை.
அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் அனைத்து மருந்துகளும் அதிக விலைக்கு உள்ளூரிலேயே வாங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளும் பெரியவர்களும் டெங்கு போன்ற விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு படை எடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன.
குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, போடி, பாளையங்கோட்டை பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், நூற்றுக்கணக்கானோர் சிக்கன் குனியா நோயாலும், மலேரியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிக்கன் குனியாவால் பாதிக்கப்படும் நோயாளிகள், இந்நோயை கண்டறிவதற்குள், இரண்டு மூன்று நாட்களில் கடும் மூட்டு வலியினால் மிகவும் சிரமப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.