சென்னை தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "கரோனா நோய் தடுப்புக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில், சிறப்பு சலுகைகளை நான் அறிவித்திருந்தேன்.
அதன் விளைவாகவும், தொழில் முனைவோரின் சிறப்பான முயற்சிகளின் விளைவாகவும் இன்றைக்கு சுமார் 1500 நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் வழங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தொழில் துறையினர் பலர் மனமுவந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெருமளவில் நிதியுதவிகள் வழங்கியுள்ளீர்கள். இதற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தகட்டமாக, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தற்போது படிப்படியாக தளர்த்தி வருகிறது. ஊரடங்கு காலத்திலும் கூட, தொழில் நிறுவனங்கள் தங்களது முக்கியமான இயந்திரங்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, தகுந்த அனுமதிகளை வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. மேலும், அவசர காலத்தில் தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி, பத்து வகையான தொடர் செயல்பாட்டுத் தொழிற்சாலைகளின் இயக்கம் ஆகியவற்றையும் அரசு அனுமதித்திருந்தது.
தற்போது, சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், தொழில்முனைவோர் அனைத்து தேவைகளுக்கும் என்னை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ