தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு: நாளை ஹால்டிக்கெட் வெளியீடு - CEETA TANCET EXAM HALL TICKET

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு நாளை (மார்ச் 11) ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முதுகலை பொறியியல் தேர்வு ஹால்டிக்கெட்
முதுகலை பொறியியல் தேர்வு ஹால்டிக்கெட்

By

Published : Mar 10, 2023, 8:11 PM IST

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA தேர்வு மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (டான்செட்-2023 ) விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

எம் .இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.750, இதர பிரிவினர் ரூ.1,500 செலுத்த அறிவுறுத்தப்பட்டனர். கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மாணவர்கள் கட்டணங்களை செலுத்தியிருந்தனர். நுழைவுத்தேர்வு எழுத பிப்ரவரி 28ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இறுதி ஆண்டில் இறுதிப்பருவத்தேர்வு எழுதும் 2022-23ம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்கள் முதுகலைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை (மார்ச் 11) வெளியிடப்படுகிறது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியாகிறது" என கூறப்பட்டுள்ளது.

டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை வரும் 25ம் தேதி காலையில் 9,820 பேரும், எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை 25ம் தேதி மாலையில் 24,468 பேரும் எழுதுகின்றனர். எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான CEETA-PG தேர்வினை 26ம் தேதி 4,961 பேர் எழுத உள்ளனர். இரண்டு தேர்வுகளையும் 15 நகரங்களில் உள்ள 40 மையங்களில் எழுத மொத்தம் 39,249 பேர் பதிவு செய்துள்ளனர்.

எம்இ, எம்டெக், எம்ஆர்க் எனப்படும் முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் ஆகிய படிப்புகளுக்கு இதுவரை டான்செட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டில் இருந்து CHEETA நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் இந்தாண்டு நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரி, உறுப்புக்கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்விற்கும் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆணவக்கொலை குறித்த விழிப்புணர்வு கூட்டம் பொது இடத்தில் நடந்தாலேயே மக்களை சென்றடையும் - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details