பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளது.
மாணவர்களின் நலன் கருதி தேர்வினை ரத்துச் செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் மாணவர்கள் நீட் தேர்வினை எழுத வேண்டும். மேலும் பல்வேறு தகுதி, நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். இந்தத் தேர்வினை எழுதினால் நோய்த் தொற்று வராதா? மத்திய அரசிற்கு மாணவர்கள்மீது அக்கறை இருந்தால் முதலில் ரத்துச் செய்திருக்க வேண்டியது நீட் தேர்வைத்தான். மருத்துவப் படிப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்வு இல்லாமல் தான் கல்லூரிகளில் சேர்ந்தனர். அந்த மாணவர்கள் தற்போதைய கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதை நடைமுறைப்படுத்தும் செயலாகத்தான் மத்திய அரசின் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்பதைப் பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்து போல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை நடத்திட வேண்டும். கரோனா நோய்த் தொற்று குறைந்த பின்னர் ஜூலை மாதம் இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ தேர்வினை நடத்தலாம். தேர்விற்கு ஒரு மாதம் முன்னர் தேர்வுக்கால அட்டவணையை அளிக்க வேண்டும். 15 நாள்கள் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும்.