1996ஆம் ஆண்டு 'இனிய உதயம்' பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜுகிபா' கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்புதான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். 1996இல்தான் தான் எழுதிய கதையைத் திருடி எந்திரன் படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் இது காப்புரிமைச் சட்டத்தின்படி குற்றவியல் குற்றம். எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார்.
இந்த வழக்கை எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்காக இயக்குநர் ஷங்கர் மீதும் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீதும் தொடுத்திருந்தார். இதையடுத்து வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011இல் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அந்த அழைப்பாணையை எதிர்த்து ஷங்கரும் கலாநிதிமாறனும் எழுத்தாளர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு செல்லாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.