இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில், 2016ஆம் ஆண்டில் சில திருத்தங்களை செய்த தமிழ்நாடு அரசு 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளை சேர்த்தது.
இதையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பு நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், அந்த சட்டத் திருத்தமும் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தன. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது முற்றிலுமாக தடைபடும். இதனால், தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் இரண்டு லட்சத்திற்கும் கூடுதலான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அலுவலர்கள் பாதிக்கப்படுவர். இது மோசமான சமூக அநீதியாகும்.
உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் வேண்டுமானால் சரியானவையாக இருக்கலாம். ஆனால், தார்மீக நெறிமுறைகளின் அடிப்படையிலும், சமூகநீதியின்படியும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் பதவி உயர்வு வழங்க அரசியல் சட்டத்தில் வகை செய்யப்படவில்லை. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தேவைகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, தானாக வழங்கப்பட்டு விடக் கூடாது ஆகிய இரு அம்சங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
அதே போன்று அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலம் பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.