எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் மாணவர்களின் கற்றல் பணி பாதிப்பு சென்னை: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தை இன்று (ஆகஸ்ட் 1) 3ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளி கல்வித்துறையின் வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினருடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி தலைமையில், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான முத்துராமசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஏற்கனவே 27 கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தோம். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இதையும் படிங்க:ஆகஸ்ட் 8ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்... ஆக.10 பிரதமர் மோடி விளக்கம் எனத் தகவல்!
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘எண்ணும் எழுத்தும் திட்டத்தினால்’ மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகிறது.
கற்பித்தல் பணியை ஆய்வு செய்து வாரத்தில் 2 நாட்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டி உள்ளது. இணையதள சேவை சரியாக கிடைக்காமல் இருக்கும்போது, அதனைப் பதிவு செய்வதற்கே அதிகளவில் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகிறது. எமிஸ் (EMIS) இணையதளத்தில் மாணவர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்வதற்கும் காலம் விரயம் ஆகிறது.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பாடத்திட்டத்திற்கு தொடர்பு இல்லாத கருத்துகளும் கற்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம். ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வினை நடத்தக்கூடாது. இதற்கான அரசாணை 149 ரத்துச் செய்யப்பட வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பதிவு உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 27 கோரிக்கைகளை தெரிவித்து உள்ளோம். குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் கோரிக்கை. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூடி பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோடநாடு வழக்கில் தாமதம் ஏன்? ஓபிஎஸ் தரப்பினர் கேள்வி