தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எண்ணூர் அனல் மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு! - chennai latest news

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ennore-thermal-power-station
ennore-thermal-power-station

By

Published : Sep 18, 2021, 7:13 PM IST

சென்னை :எண்ணூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த 450 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையம் காலாவதியானதால், கடந்த 2017ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த அனல் மின் நிலையத்திற்கு மாற்றாக, விரிவாக்கம் செய்வதாக கூறி கூடுதலாக இரண்டு அனல் மின் நிலைய அலகுகளை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகம் திட்டமிட்டது.

அதன் அடிப்படையில் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க அலகிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருந்தது. இந்த இரண்டு அனல் மின் நிலைய அலகுகளை அமைக்க 10 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி ஒன்றிய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டிருந்தது.

மின்சாரத்துறை கடிதம்

ஆனால் சுற்றுச்சூழலுக்கான அனுமதி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அனல் மின் நிலைய விரிவாக்க பணிகள் 703 கோடி ரூபாய் செலவில் 17 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்திருந்தது. இதனால் சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நான்கு ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிடுமாறு ஒன்றிய அரசுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாரத்துறை கடிதம் எழுதியிருந்தது.

இது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்காமல் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டத்திற்கு மீண்டும் புதிய சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது. இந்த சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், ”இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006ற்கு எதிரானதாகும் என்பதால் இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம் தொடர்பாக இன்னும் இரண்டு மாதத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துகளை பெற்று ஒன்றிய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன் பின் ஆறு மாதத்திற்குள் சுற்றுச்சூழல் துறை மக்களின் கருத்துக்களை பரிசீலித்து உரிய கட்டுப்பாடுகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒன்றிய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதி நிறுத்தி வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

பசுமைத் தீர்ப்பாயம்

அதே வேளையில் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், மின்சார உற்பத்தியைத் தொடங்குவதற்கான அனுமதி கிடையாது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக வந்த 14 பேர் - ராமநாதபுரம் போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details