இதுகுறித்து இந்திய தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கல்லூரிகளின் கட்டண நிர்ணயிப்புக் குழு அமைத்துள்ளது.
கடந்த 4, 5ஆம் தேதிகளில், அந்தக் கட்டண குழு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கல்லூரி வரவு, செலவு கணக்குகளை எடுத்துக்காட்டி, தங்களுக்குத் தேவையான கல்விக் கட்டணத்தை சிபாரிசு செய்யக் கேட்டுள்ளது. தனியார் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் பிற கல்லூரிகளை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கு ஊதியம் சரியாகக் கொடுப்பதில்லை.
கொடுத்தாலும் மிக குறைவாகவே கொடுக்கப்படுகிறது. ஆனால், அரசு, வருமான வரி அலுவலகம் முன்பு காண்பிக்கப்படும் கணக்குகள் பன்மடங்கு உயர்த்தி காட்டப்படுகின்றன. கடந்த ஆறு மாதங்களில் வருமான வரித்துறையானது, தமிழ்நாட்டைச் சார்ந்த 3 தனியார் கல்வி நிறுவனங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கில் வராத சொத்து குவிப்பை கண்டுப்பிடித்துள்ளது.