சென்னை:பொறியியல் படிப்பினை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்துவருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றம்செய்யப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பாெறியியல் படிப்பிற்கான நான்கு ஆண்டு பாடத்திட்டங்களும் மாற்றப்படவுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரக்கூடிய முதலாம் ஆண்டிற்கான பழைய பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டத்திற்கு கல்விக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பொறியியல் கல்லூரிகள் நவம்பர் 1ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
தொழில் துறையினர் பங்களிப்பு அதிகரிப்பு
இந்தாண்டு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், அடுத்தடுத்து 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு, 4ஆம் ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பேராசிரியர்கள் மாணவர்களுக்கு அதிகளவில் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்பொழுது பாடத்திட்டத்தில் தொழில் துறையினர் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் இந்திய தொழிற்கூட்டமைப்பு, மகேந்திரா, எல்.அண்ட்.டி. போன்ற தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் எனத் தெரிகிறது.
மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும்பொருட்டும் புதிய பாடத்திட்டம் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் நடப்புக் கல்வியாண்டிற்குள் எழுதி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை