சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளான பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜூன் 3ஆம் தேதி மாலை 6 மணி வரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 73 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 301 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 49 ஆயிரத்து 737 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்கள் ஜூன் 4ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
விளையாட்டுப் பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, அவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டியின் நிலைக்கு ஏற்ப மதிப்பெண்களை வழங்குவர். அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 500 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்.
அந்த வகையில், பொறியியல் படிப்பில் அண்ணா பல்கலைக்கழக துறையில் 12 இடங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் 488 இடங்கள் என மொத்தம் 500 இடங்களில் சேர்வதற்கு முதற்கட்டமாக வரும் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 3,744 மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்.