சென்னை:பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும் விதிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் ஆன்லைன் வழியில் 4 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு இனி 7 நாட்களுக்கு பதில் 2 வார காலத்திற்கு நடைபெறும்.
ஜூன் 20 ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி ஜூலை 19ந் தேதி வரை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 15 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறைத்து புதிய விதிமுறையைத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்த பின்னர் மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளுக்குச் செல்கின்றனர். இதனால் ஏற்படும் காலியிடங்களை தவிர்க்க இந்த நடை முறை கொண்டுவரப்பட்டுள்ளது.