சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2,19,346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,60,783 கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 12,059 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3,143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரிவினருக்கான விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதல் கட்டப்பொது கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை மாணவர்களுக்கான விரும்பும் கல்லூரிகளைப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதி ஒதுக்கீடு உத்தரவு ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட்டன. மாணவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் அல்லது பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் தங்களுக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர விரும்புகிறேன் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.