சென்னை:தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு புதியதாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள முறையை, தனியார் கல்லூரிகளுக்கு விளக்குவதற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.
அதில் தனியார் கல்லூரிகளில் இருந்து மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வின் புதிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு பாெறியியல் மாணவர் சேர்க்கை செயலளார் புருஷோத்தமன் கூறியதாவது, ”ஆண்டுதோறும் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் பலர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பொறியியல் இடங்களில் சேர்வதில்லை. இதனால், பல கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் விடுவதால் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இதனைத்தவிர்க்கும் பொருட்டு நடப்பாண்டு முதல் புதிய முறையினை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் இடங்களில் ஒரு வார காலத்திற்குள் சேரவில்லை எனில், அந்த இடம் காலி இடமாக கருதப்பட்டு, தரவரிசையில் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மாணவருக்கு அந்த இடம் ஒதுக்கப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகமாகிறது.