சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று தமிழ்நாட்டில் 2022-2023ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக் படிப்புகளில், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள் 5, மாநில அரசின் பொறியியல் கல்லூரிகள் 11, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 408 என்ற எண்ணிக்கையில் செயல்பட்டு வந்தன. இதில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விண்ணப்பிக்காத 6 கல்லூரிகள்: இந்நிலையில் 2023-24ம் கல்வியாண்டு விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில் புதிய கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 402 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்துள்ளன. எனினும், 6 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால் அந்தக் கல்லூரிகளில் வரும் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 134 பொறியியல் கல்லூரிகளில் கணினி சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் இடங்களை கேட்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவுறுத்தல்: தமிழ்நாட்டில் மார்ச் 13ம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 3ம் தேதி நிறைவடைந்தது. தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக மே 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதற்கிடையே, உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் அனைத்து மாணவர்களும் கல்லூரியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.