சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத் தூய்மை, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, கழிவு மேலாண்மை, மறுசுழற்சி முறைகள், நெகிழி பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கைக்கு உகந்த பொருள்களை பயன்படுத்துதல், பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வருகிற ஜனவரி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பள்ளித்தூய்மைப் பணி செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து, கரும்பலகை பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்தல்.
ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை கழிவகற்றம் செய்தல். பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல்.