சென்னை: கடந்த 2009 - 2010 காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்ததாகவும் லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.
அதன் அடிப்படையில் கேரள மாநிலம், கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின்கீழ் மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும், இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பல்வேறு கட்டங்களாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்குச் சொந்தமான கட்டடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. மேலும், மார்ட்டினுக்கு தொடர்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கொச்சின் அமலாக்கத்துறை லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.