தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை? - Enforcement Directorate raid

Enforcement Directorate raid: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர் தொடர்புடைய 10 இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அதிரடி சோதனையில் இறங்கிய அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அதிரடி சோதனையில் இறங்கிய அமலாக்கத்துறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 10:30 AM IST

சென்னை: சென்னை மற்றும் திருச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், வழக்கு தொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று (செப்.12) சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் திருச்சியில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குக்கு தொடர்புடைய சோதனை எனவும் அதிகாரிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அமலாகத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நான்கு முறை சோதனை செய்தது. அவரின் வீடு, அவரது சகோதரர் வீடு, உறவினர்கள் வீடு, தொழில் சம்பந்தமான இடங்கள் ஆகிய இடங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் புதிதாக வாங்கிய அசையும், அசையா சொத்துகளின் விவரங்கள் கண்டறியப்பட்டன.

அதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் எல்லாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று (செப். 12) அமலாக்கத்துறை மீண்டும் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகிறது.

மேலும், சோதனையானது யார் யார் வீடுகளில் நடத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை சோதனை முடிவில் அமலாக்கத்துறை அறிகையில் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. தற்போது சென்னை, திருச்சியில் நடத்தப்படும் சோதனைகளின் அடிப்படையில் அங்கு கிடைக்கப் பெறும் ஆவணங்களை வைத்து மேலும் சில இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதற்குள் அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சிங்கப்பூர் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாணவிகள் கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details