சென்னை: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் அடைப்பு இருந்ததால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதனை அடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு நேரில் வந்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை காவலில் எடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் செந்தில் பாலாஜி கைது செய்தது ஏன் என சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜி மோசடியில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக தனது உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மூலமாக செந்தில் பாலாஜி பணத்தைப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் 1.34 கோடி மற்றும் அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கில் 29.55 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித்துறையில் செந்தில் பாலாஜி கணக்கு காண்பித்ததை ஒப்பிடும்போது பல மடங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.