அமலாக்கத்துறையின் 5 நாள் கஸ்டடி துவக்கம் சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஜூன் 13-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் பல மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அமலாக்கத்துறை அழைத்துச் சென்ற போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு வழக்கைத் தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜி பூரண குணமடைந்த பிறகு காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி போபன்னா மற்றும் எம்.எம். சுந்தரேசன் தலைமையிலான அமர்வு முன்பு செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. அதாவது, செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் இல்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு, நீதிபதி அல்லி முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜரானார். வழக்கு விசாரணையின் போது ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜிக்கு ஒவ்வொரு நாளும் இரு முறை பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது செந்தில் பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொள்வோம் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம். மீண்டும் செந்தில் பாலாஜியை வரும் 12 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், சென்னை முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தின் 3-வது மாடியில் வைத்து செந்தில் பாலாஜிடம் விடிய விடிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் துப்பாக்கி ஏந்திய 10க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணாமலை நடைப்பயணம் மாற்றத்தை ஏற்படுத்துமா? - மாஜி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரியாக்ஷன் என்ன?