சென்னை:தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி மற்றும் அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, விழுப்புரத்தில் உள்ள எம்.பி கௌதம சிகாமணி வீடு உட்பட அவர்களுக்கு தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2007 திமுக ஆட்சியில் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது பதவியை துஷ்பிரயோகப்படுத்தி செம்மண் குவாரிகளில், குவாரி நிபந்தனைகளை மீறி விழுப்புரத்தில் சட்டவிரோதமாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலமாக அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, ஜெயசந்திரன் உட்பட மூன்று பேரை கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த போது அதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.