சென்னை:சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது வங்கி மோசடி விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தியன் வங்கியில் 312 கோடி ரூபாயும், ஆக்ஸிஸ் வங்கியில் 82 கோடியும் மோசடி செய்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து கடனைப் பெற்று, அந்தத் தொகையை கடன் வாங்கிய காரணத்திற்கு பயன்படுத்தாமல் வேறு வகையில் நிதியைப் பயன்படுத்தி மோசடி செய்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் அமலாக்கத்துறை இந்தியன் வங்கியை மோசடி செய்த விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் வங்கியில் கடனாகப் பெற்ற தொகை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததை அறிந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 234 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது.
இந்நிலையில் ஆக்சிஸ் வங்கியில் 82 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனத்தின் 66.93 கோடி ரூபாய் அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நகை கடை இந்தியன் வங்கிக்கு திருப்பித் தராத கடன் பாக்கி காரணமாக எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் ஜப்தி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.