சென்னை:அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்கக் கோரியும் அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜியை ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்படும் முன், சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் தான் இருந்தார் என்றும் அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு என்று அமலாக்கத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜியை விசாரணைக்கு ஆஜராக கூறி ஜூன் 13ஆம் தேதி சம்மன் அளித்தபோது அதை அவர் பெற மறுத்ததாகவும், அதிகாரிகளை மிரட்டும் தொணியில் நடந்து கொண்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்கள் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்ப போதுமானதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டதற்கு அவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவும், கைது செய்யப்பட்ட போது அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதின் போது அனைத்து நடைமுறைகளும் சரிவர பின்பற்றப்பட்டது என்றும் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் இதுவரை அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. வரும் ஜூன் 27 ஆம் தேதி மேகலா தொடர்ந்த ஆட்கொனர்வு மனு விசாரணைக்கு வரும்போது இந்த மனுவும் விசாரிக்கப்பட உள்ளது.
செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் கூடுதல் மனு:தனது கணவருக்கு எதிராக மத்திய அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என 2022ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பேசி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.