தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக அரசு மருத்துவர்களை அமலாக்கத்துறை அவமதிப்பு: டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு! - bjp

தமிழக அரசு மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் அமலாக்கத்துறை செயல்படுகிறது என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 16, 2023, 7:46 PM IST

சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர் எனவும், இருதய ரத்தக் குழாய்கள் மூன்றில் அடைப்பு இருப்பதை ஆஞ்சியோகிராம் செய்து உறுதிபடுத்திய நிலையில், அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால் அதற்கு மாறாக அமலாக்கத்துறை, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ESI மருத்துவமனை, மருத்துவர்களை வரவழைத்து ,அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட சிகச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது எனக்கூறிய ரவீந்திரநாத், இது தமிழக அரசு மருத்துவர்கள் மீது அவ நம்பிக்கையை உருவாக்கும் செயல் என குற்றம் சாட்டினார்.மேலும், AIIMS ,JIPMER மருத்துவக் குழுக்களையும் வரவழைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சித்து வரும் நிலையில், இது தமிழக அரசு மருத்துவர்களை, அவமானப் படுத்தும் செயலாகும் எனவும், அவர்கள் மீதும், அவர்களின் திறமைகள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்ட ரவீந்திரநாத், தற்போதைய சூழலில் அரசு மருத்துவர்களின் அறிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவோ, சந்தேகப்படவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளதை எடுத்துக்கூறினார்.

தொடர்ந்து பேசிய ரவீந்திரநாத், மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவது வேதனைக்குரியது எனவும், மேலும், மனித உரிமைகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இது கடும் கண்டனத்திற்குரிய செயல் என தெரிவித்த ரவீந்திரநாத், சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்திய குழந்தை திருமணங்கள் தொடர்பான பிரச்சனையில், பெண் குழந்தைகளுக்கு இரு விரல் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வில்லை என தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவர்களும் மறுத்துள்ள நிலையில், அதற்கு எதிரான கருத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதை தற்போது நடைபெறும் அரசியல் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கான மாநில ஆளுநராகவும் உள்ள மகப்பேறு மருத்துவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் தொடர்ந்து போலி மருத்துவ அறிவியல் கருத்துக்களையும், மருத்துவ அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துவருவது வருந்தத்தக்கது என தெரிவித்த ரவீந்திரநாத், குழந்தைகளின் பண்பாடு, தேசப்பக்தி, சிந்தனை போன்றவற்றை அவர்கள் வளரும் சமூகச் சூழலே தீர்மானிக்கின்றன எனவும் அப்போது குறிப்பிட்டார். மருத்துவக் கல்வியில் பல்வேறு மாற்றங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவக் கல்வியில் பிற்போக்கான மாற்றங்களைச் செய்யும் ,ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மருத்துவக் கல்வியை , இந்து ராஷ்டிரத்திற்கான மருத்துவக் கல்வியாக மாற்றும் முயற்சியில் NMC தீவிரம் காட்டுகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

அது குறித்து பேசிய ரவீந்திரநாத், முதலாம் ஆண்டுத் தேர்வில் 4 முயற்சிகளில் தேர்ச்சி பெற வேண்டும்,9 ஆண்டுகளுக்குள் எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்க வேண்டும் ,இல்லை எனில் மருத்துவப் படிப்பையும்,அவரது மருத்துவ இடத்தையும் முற்றிலுமாக இழக்க வேண்டும் .இது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிராக அமையும். NEXT - National Exit Test என்ற தேர்வு ஏற்புடையதல்ல. இது சமூக நீதியை பாதிக்கும். மாநில உரிமையை ,மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தின் உரிமையை பறிக்கும் செயல். மருத்துவ மாணவர்களை, கிளினிக்கல் அனுபவமும், ஆற்றலும் இல்லாத புத்தகப் புழுக்களாக மாற்றிவிடும். குடும்பத்தை தத்தெடுக்கும் திட்டம் (Family Adoption Programme) என்ற புதிய திட்டமும் மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப் படுகிறது. இது, மருத்துவ மாணவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும்.

இந்த, FAP திட்டத்திற்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்புடையதல்ல. குடும்பங்களுக்கு, இலவச சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டே வழங்கிட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நல விவரங்களையும் அதற்கான ஊழியர்களைக் கொண்டே சேகரிக்க வேண்டும். அதற்கான ஊழியர்களை போதிய அளவில் நிர்ணயிக்க வேண்டும். அதை விடுத்து ,அப்பணிகளில் மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்துவது சரியல்ல. மருத்துவக் கல்வியை , இந்து மதத்தின் ஒரு பண்பாட்டுக் கூறாக மாற்றும் முயற்சியை,தேசிய மருத்துவ ஆணையம் ( NMC ) மூலமும் இதர அமைப்புகள் மூலமும் செயல்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. இது மருத்துவக் கல்வியின் மதச்சார்பின்மையை, அறிவியல் அடிப்படையை தகர்க்கும்.

மருத்துவக் கல்வியின் தரத்தை, அறிவியல் தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றத்தை பாதிக்கும். தமிழ்நாடு அரசின், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் SC/ST மாணவர்களிடம், கற்பிப்புக் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என அரசாணைகள் உள்ளன. தெளிவான,அரசாணைகள் இருந்த போதிலும், SC/ST மாணவர்களிடம் , கற்பிப்புக் கட்டணங்களை கட்டச் சொல்லி ,கல்லூரி நிர்வாகங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது சமூக நீதிக்கு எதிரானது. சமூக நீதியை ,மருத்துவக் கல்வியில் காத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதல்வரை திடீரென சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details