தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடை குறித்து தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி - டாஸ்மாக் கடை

சென்னை: டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்த ஏன் புதிய சட்டம் இயற்றக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

chennai high court
chennai high court

By

Published : Jan 21, 2020, 1:40 PM IST

டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அந்த வழக்கினை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்தப் பிரச்னை முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த பிரச்னை என்றும், மாநில அரசு ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும் ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியலமைப்புச் சட்டப்படி கிராம பஞ்சாயத்துகள் சமூக நலன், பொதுமக்களின் உடல்நலம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வது கடமை என்று தெரிவித்த நீதிபதிகள், ஏன் மாநில அரசு கிராம பஞ்சாயத்துகளை மதிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக ஏன் சட்டம் கொண்டு வரக் கூடாது என வினா எழுப்பிய நீதிபதிகள், இது ஒரு முக்கியமான பிரச்சனை என்றும் தெரிவித்தனர்.

அரசின் கொள்கை முடிவுகள் காலதாமதம் செய்யக்கூடாது என்றும், தாங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குள்பட்டே கருத்து தெரிவிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர். இது தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திய அவர்கள், இது மிகவும் முக்கியமான பிரச்னை என்றார். இது தமிழ்நாட்டிற்கு மட்டும் பிரச்னையல்ல; ஒட்டுமொத்த பிரச்னை என்று நீதிபதிகள் கூறினர்.

அப்போது குறுக்கிட்ட பாமக தரப்பு வழக்கறிஞர் கே. பாலு, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு மதுபான கடைகளைக் குறைப்பதாகத் தெரிவித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும், குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், டாஸ்மாக் கடை தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டுவருவது பற்றியும், அதேபோல் பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது தொடர்பாக சட்டம் கொண்டுவருவது பற்றியும் அரசு முடிவு எடுத்து அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: திமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details