சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் பணியாற்றிய வேலைவாய்ப்பு அலுவலர் சங்கர் (46), சக ஊழியர்களுடன் கல்லூரி மைதானத்தில் நேற்று (நவ.,5) வாலிபால் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது கல்லூரி முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்ததால் அங்கிருந்து சென்ற சங்கர் மீண்டும் மைதானத்திற்கு வரவில்லை.
சக ஊழியர்கள் சங்கரைத் தேடிய நிலையில், மைதானத்திற்கு அருகே இருந்த கிணற்றிற்கு அருகில் அவருடைய ஷு, வாட்ச், பர்ஸ், கர்சீப் போன்ற உடமைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கிணற்றுக்குள் பார்க்கவே சங்கரின் உடல் மிதந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவலளித்தனர்.
பின்னர் அங்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சங்கரின் உடலை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.