தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் மத்திய, மாநில அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தப்பட்டதைக் கண்டிக்கும் வகையிலும், விவசாயிகளை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதாவை கைவிடக்கோரியும், பொதுத் துறைகளை தனியார் மயமாக்கி வருவதை கண்டித்தும், மின்வாரிய நிர்வாகம் முத்தரப்பு உடன்படிக்கையை மதிக்காமல் அவுட்சோர்சிங் செய்து வருவதை, ரத்து செய்திட வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் அறைகூவலை ஏற்று நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து மாநிலம் முழுவதும் தீவிரமாக களப்பணி ஆற்றி வந்தது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக நிவர் புயல் உருவாகி நாளை (நவம்பர் 26) கரையை கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 16 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த புயலால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்து மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்கு திரும்பிட மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் பணி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.