சென்னை:பிரபல நடிகை ஜெயப்பிரதா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் இணைந்து திரையரங்கம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் நவம்பர் 1991 முதல் 2002 வரை 8 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், 2002 முதல் 2005 வரை 1 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயும், 2003 ஆம் ஆண்டு முதல் வசூலித்த இ.எஸ்.ஐ பணத்தை தொழிலாளர்கள் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக இ.எஸ்.ஐ நிறுவனம் சார்பில் எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் காப்பீட்டு பணத்தை திரும்ப செலுத்தி விடுவதாக ஜெயப்பிரதா சார்பில் கூறிப்பட்டது. இ.எஸ்.ஐ பணத்தை சரியாக செலுத்தாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இ.எஸ்.ஐ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத 6 மாத சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில், எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இ.எஸ்.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொழிலாளர்கள் பணத்தை செலுத்தாததால் வழக்கு தொடரப்பட்டது. பணம் செலுத்தவில்லை என பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார். ஜெயப்பிரதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏன் தொழிலாளர்கள் பணம் செலுத்த இல்லை என இ.எஸ்.ஐ நோட்டீஸ் அனுப்பவில்லை, தன்னிலை விளக்கமும் பெறவில்லை, நேரடியாக வழக்கு தொடரப்பட்டது என்று கூறினார்.
மேலும் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் பணத்தை செலுத்த முடியவில்லை என்றும் வழக்கறிஞர் வாதாடினார். அதேநேரம் பொது மன்னிப்பு விண்ணப்பத்தை இ.எஸ்.ஐ விசாரணை செய்யவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் பணத்தை சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றும் ஜெயப்பிரதா தரப்பி வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தவறு செய்ததால் மட்டுமே நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. உரிய நேரத்தில் பணத்தை செலுத்தி இருந்தால் ஏன் நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கும். வட்டியுடன் பணத்தை மீண்டும் செலுத்துவதாக இருந்தால் 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய நீதிமன்றம் தயாராக உள்ளதாக தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:அக்னி வீரர் தற்கொலையில் ராணுவம் விளக்கம்! தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!