சென்னை: தமிழ்நாடு அரசின் மாநில பாடப் புத்தகங்களில் திருக்குறள் பகுதிகள் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. எனினும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முன்பு இருந்த அளவிற்கு விரிவான வகையில் இடம் பெறவில்லை. மேலும் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே திருக்குறள் சார்ந்த கேள்விகள் இடம் பெறுகின்றன.
இதனை குறிப்பிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் தொடர்ந்து பொதுநல வழக்கில், திருக்குறளுக்கு தேர்வில் முக்கியத்துவம் அளிக்காத நிலை இருந்தால், மாணவர்கள் எப்படி படிப்பார்கள். திருக்குறளை, அதன் பொருளை மாணவர்கள் அதிக அளவில் தெரிந்து கொள்ளும் வகையில் திருக்குறளுக்கு, பாடப் புத்தகங்களில் முக்கியத்துவம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடப் புத்தகங்களில் திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக பகுதிகள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தது.